பொதுவாக காதல் கடிதம், விடுமுறைக் கடிதம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவ்வளவு ஏன் தற்கொலைக் கடிதம் கூட உண்டு. ஆனால் இங்கு நாம் படிக்கப் போவது ஒரு விநோதக் கடிதம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல கடையைத் திறக்கச் சென்ற ஜெயராஜுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
கடையைத் திறந்து உள்ளே பார்த்தபோது, வெறிபிடித்த குரங்கு ஒன்று கடைக்குள் நுழைந்திருந்தால் கடை எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அனைத்து பாட்டில்களும் அடித்து நொறுக்கப்பட்டு, அரிசி,மைதா மாவுப் பாக்கெட்டுகள் கிழித்து, அரிசியில் கொட்டப்பட்டிருந்தது. மேற்கூரையில் இருந்த ஓடுகளும் பிரிக்கப்பட்டு இருந்தது.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கடையில் இருந்த கல்லாப்பெட்டியை ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், உயிரைப் பணயம் வைத்து திருட வந்தால், காசு இல்லாமல் கல்லாப் பெட்டியை துடைத்து வைத்து என்னை ஏமாற்றலாமா? அதுதான் இந்த குரங்கு வேலை என்று எழுதப்பட்டிருந்தது.
அப்போதுதான், கடையில் பணத்தைக் கொள்ளையடிக்க வந்த கொள்ளையன், பணம் இல்லாததால் அதிருப்தியில் இவ்வாறு குரங்கு வேலையில் ஈடுபட்டுச் சென்றிருப்பது தெரிய வந்து.
அதே சமயம், அவன் எழுதப் பயன்படுத்திய மார்க்கர் பேனா அங்கே இருந்ததால், அதை வைத்து கைரேகையை சேகரிக்கக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.